< Back
கிரிக்கெட்
அவர்தான் எப்போதும் என்னுடைய ஹீரோ- சச்சின் குறித்து பேசிய விராட் கோலி..!!
கிரிக்கெட்

"அவர்தான் எப்போதும் என்னுடைய ஹீரோ"- சச்சின் குறித்து பேசிய விராட் கோலி..!!

தினத்தந்தி
|
5 Nov 2023 10:53 PM IST

எனது ஹீரோவான சச்சினின் சாதனையை சமன் செய்தது மிகப்பெரிய கவுரவம் என்று விராட் கோலி தெரிவித்தார்.

கொல்கத்தா,

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இந்த சூழலில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின், தனது எக்ஸ் வலைதளத்தில், "விராட் கோலி நீங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் எனக்கு 49 இருந்து 50 வயது ஆக 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் 49 லிருந்து 50 வந்து என்னுடைய ரெக்கார்டை இன்னும் சில தினங்களிலே நீங்கள் முறியடிப்பீர்கள் என நான் நம்பிக்கை கொள்கிறேன். வாழ்த்துக்கள்.." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றநிலையில், ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி பேசுகையில், "இது எனக்கு ஒரு மிகப்பெரிய போட்டியாக இருந்தது. ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணிதான் மிகவும் கடினமான போட்டியாளராக திகழ்ந்தார்கள். இதனால் இந்த அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. அதுவும் எனது பிறந்த நாளில் இந்திய அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்கள் இந்த நாளை மேலும் ஸ்பெஷல் ஆக எனக்கு மாற்றி விட்டார்கள். எங்களுடைய தொடக்க வீரர்கள் இன்று நல்ல அடித்தளத்தை கொடுத்தார்கள். ஆனால் பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏற்றதாக இல்லை. மேலும் அணி நிர்வாகம் என்னை கடைசி வரை பேட்டிங் செய்ய கூறியிருந்தது. இந்த பொறுப்பை நான் எடுத்துக் கொண்டு விளையாடினேன். 315 ரன்கள் கடந்த உடன் நல்ல இலக்கை நெருங்கி விட்டோம் என்று தோன்றியது. என்னுடைய கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன்.

கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் நான் சந்தோஷமாக இருக்க கடவுள் எனக்கு ஆசிர்வாதம் செய்து இருக்கிறார் என நினைக்கிறேன். இதனால்தான் இத்தனை ஆண்டுகள் செய்ததை மீண்டும் என்னால் மகிழ்ச்சியாக செய்ய முடிகிறது. என்னுடைய சதத்திற்கு சச்சின் வாழ்த்து அனுப்பியதை பார்த்தேன். இந்த தருணத்தில் என்னால் அத்தனையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஏனென்றால் நான் ஹீரோவாக பார்த்த நபரின் சாதனையை சமன் செய்திருப்பது மிகவும் ஸ்பெஷலான தருணமாக நினைக்கிறேன்.இது எனக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். ஆனால் சச்சின் போல் என்னால் பேட்டிங் செய்ய முடியாது. அந்த ஒப்பீடு தவறு என்றுதான் நான் சொல்லுவேன். நான் இப்போது மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறேன். ஏனென்றால் நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும்.

சச்சினை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்த நாட்கள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட வாழ்த்து எனக்கு கிடைத்தது நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்" என்று அவர் உணர்ச்சிகரமாக கூறினார்.

மேலும் செய்திகள்