ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேசிய சச்சின் தெண்டுல்கர்!
|ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.
மும்பை,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 7 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அந்த அணி 4 வெற்றி (இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்துக்கு எதிராக), 3 தோல்வியுடன் (வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக) 6-வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் மற்றும் முன்னாள் சாம்பியன்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வென்றால் முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்து சாதிக்க முடியும்.
இந்த ஆட்டத்துக்கான தீவிர பயிற்சியில் நேற்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவர்களை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய ரஷித் கான் கூறுகையில்;-
' வான்கடேவில் அவரை ஒரு சிறப்பான சந்தர்ப்பத்தில் சந்தித்தது வித்தியாசமான உணர்வு என்று நினைக்கிறேன். நிச்சயமாக, இது அணிக்கும் வீரர்களுக்கும் நேர்மறை ஆற்றலைக் கொடுத்துள்ளது. அவரை சந்திப்பது பல வீரர்களுக்கு கனவு. நிறைய பேர் உங்களால்தான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. இந்த சந்திப்பு அவர்களுக்கு நிறைய ஆற்றலையும், நிறைய நேர்மறையான விஷயங்களையும் கொடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.