ஒருநாள் கிரிக்கெட்டில் 49வது சதம்...விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்...!
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
கொல்கத்தா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் விராட் கோலி சதமும் (101 ரன்), ஸ்ரேயாஸ் அரைசதமும் (77 ரன்) அடித்து அசத்தினர். இந்த ஆட்டத்தில் விராட் கோலி அடித்த சதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 49வது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் (49 சதன்) உலக சாதனையை கோலி சமன் செய்தார்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற தமது சாதனையை சமன் செய்த விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
சிறப்பாக விளையாடினீர்கள் விராட். 49ல் இருந்து 50க்கு செல்ல எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது (வயதை சுட்டிக்காட்டுகிறார்) . ஆனால், அடுத்த சில நாட்களில் 49-லிருந்து 50-க்கு சென்று எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.