எஸ்.ஏ.20 ஓவர் இறுதி போட்டி: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி "சாம்பியன்"
|டர்பன் சூப்பர் ஜெயண்ட்சுக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வெற்றிபெற்றது.
ஜோகன்ஸ்பர்க்,
தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் கேசவ் மகராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்சும், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் இறுதி போட்டியில் நேற்று இரவு மோதின.
இதல் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோர்டான் ஹெர்மான் 42 ரன்களும், அபேல் 55 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 42 ரன்களும், ஸ்டப்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முடிவில் 17 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக முல்டர் 38 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 5 விக்கெட்டுகளும், வோரல் மற்றும் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்சுக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.