எஸ்.ஏ.20 ஓவர் லீக் 2025: ஜாஸ் பட்லர் விலகல் - காரணம் என்ன?
|ஜாஸ் பட்லர் எதிர்வரும் எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.
லண்டன்,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் ஜாஸ் பட்லர் எதிர்வரும் எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது, பார்ல் ராயல்ஸ் ரசிகர்களுக்கு ஒரு செய்தி. நான் இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் விளையாடுவதற்கு வரமாட்டேன். இதுகுறித்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். எனக்கு இங்கிலாந்து அணிக்காக சில ஆட்டங்கள் இருக்கிறது. என்னுடைய முழு கவனமும் அதிலேயே இருக்கும்.
எனக்கு இந்தத் தொடரின் மீதும் பார்ல் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் மீதும் நிறைய அன்பு இருக்கிறது. இந்த தொடருக்காக என்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் மீண்டும் இந்த தொடருக்கு திரும்பி வந்து விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.