எஸ்.ஏ.20 ஓவர் லீக்; பார்ல் ராயல்ஸ் அணியை சுருட்டி அபார வெற்றி பெற்ற சூப்பர் ஜெயன்ட்ஸ்
|சூப்பர் ஜெயன்ட்ஸ் தரப்பில் நூர் அகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டர்பன்,
தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. டர்பன் அணி தரப்பில் ப்ரீட்ஸ்கே 78 ரன்னும், க்ளாசென் 50 ரன்னும் எடுத்தனர். ராயல்ஸ் அணி தரப்பில் ஷம்சி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராயல்ஸ் அணி சூப்பர் ஜெயன்ட்ஸின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 125 ரன் வித்தியாசத்தில் டர்பன் அணி அபார வெற்றி பெற்றது. சூப்பர் ஜெயன்ட்ஸ் தரப்பில் நூர் அகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.