எஸ்.ஏ 20 ஓவர் லீக்; ரோசோவ் அதிரடி வீண்...பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் வெற்றி..!
|அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடிய ரோசோவ் 82 ரன்னில் அவுட் ஆனார்.
சென்சூரியன்,
தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி, நீஷம் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் மில்லர் 75 ரன், வான் ப்யூரன் 72 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 211 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது.
கேப்பிடல்ஸ் அணி தரப்பில் பில் சால்ட் 0 ரன், தியூனிஸ் டி ப்ரூயின் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரோசோவ் - வில் ஜேக்ஸ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் வில் ஜேக்ஸ் 58 ரன்னிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடிய ரோசோவ் 82 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கேப்பிடல்ஸ் அணியால் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.