எஸ். ஏ 20 ஓவர் லீக்; டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி..!
|சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி தரப்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
டர்பன்,
தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் வியான் முல்டர் 52 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் அணி தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஆடியது.
சன்ரைசர்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜோர்டான் ஹெர்மான் 25 ரன்னிலும், டேவிட் மலான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய டாம் அபெல் 1 ரன், எய்டன் மார்க்ரம் 38 ரன், பேட்ரிக் க்ரூகர் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிர்ஸ்டன் ஸ்டப்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் 19.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.