உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ரசிகர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில்வே நிர்வாகம்
|உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை (நவம்.19) ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
ஆமதாபாத்,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதனைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அதிக பணம் செலவளித்து விமானத்தில் வருவார்கள். இதனை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை தில்லியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை ஆமதாபாத் வந்து சேரும். பின்னர் இறுதிப்போட்டி முடிந்த பின்பு திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, தில்லிக்கு திரும்பிச் செல்லும்.
மேலும் மும்பையில் இருந்து ஆமதாபாத்துக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகின்றன. இதில் ரூ.620 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1665 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பங்கேற்ற எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 1983 மற்றும் 2011 ஆகிய இருமுறை கோப்பை வென்ற இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஆறாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.