பெண்கள் பிரீமியர் லீக்: பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு
|பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டெல்லி,
2வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அந்த வகையில், டெல்லியில் நேற்று நடந்த 19வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 15 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ள பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது