இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா..? - ரோகித் சர்மா பதில்
|இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகள் இரு பிரிவுகளாக விளையாடின.
இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தன.
இந்த சூழலில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் நாளை (23 ஆம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
தற்போது நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பற்றி மட்டுமே தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றும். பாகிஸ்தான் பயணம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.