தோனியா.. ரோகித் சர்மாவா.. யார் தலைசிறந்த கேப்டன்..? ரவி சாஸ்திரி பதில்
|தந்திரமான வியூகங்களை வகுப்பதில் ரோகித் சர்மா கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று ஐசிசி சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இதன்படி 50 போட்டிகளை வென்ற முதல் டி20 இந்திய கேப்டனாகவும் ரோகித் சர்மா உருவெடுத்தார்.
முன்னதாக ஐ.பி.எல். தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார். அதனாலயே விராட் கோலி விடைபெற்றதும் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவருடைய தலைமையில் இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா 2023 ஆசிய கோப்பையில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றபடி 2022 ஆசிய கோப்பை, 2022 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு மீது விமர்சனங்கள் எழுந்தன.
இருந்தபோதும் 2024 டி20 உலகக் கோப்பையில் அசத்திய ரோகித் சர்மா 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் கபில் தேவ், எம்.எஸ். தோனிக்கு பின் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற 3வது கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார்.
இந்நிலையில் தோனியை போலவே ரோகித் சர்மாவும் மிகச்சிறந்த இந்திய கேப்டன் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "ஒரு தந்திரவாதியாக ரோகித் சர்மா சிறந்தவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர் தோனிக்கு நிகராக சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருப்பார். அவர்களில் யார் சிறந்தவர் என கேட்டால், இருவருமே சமமானவர்கள் என்றே நான் கூறுவேன். இதைவிட பெரிய பாராட்டு ரோகித்திற்கு என்னால் கொடுக்க முடியாது. ஏனென்றால் தோனி என்னவெல்லாம் சாதித்துள்ளார், எத்தனை கோப்பைகள் வென்றுள்ளார் என்று நமக்கு தெரியும்.
தந்திரமான வியூகங்களை வகுப்பதில் ரோகித் சர்மா கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்பதை இந்த டி20 உலகக் கோப்பையில் பார்த்தோம். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, பும்ரா அல்லது அக்சர் பட்டேல் போன்றவர்களை அவர் சரியான நேரத்தில் பயன்படுத்தியதை பார்த்தது சிறப்பாக இருந்தது. எம்.எஸ்.தோனிக்கு நிகராக இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் என்ற நற்பெயருடன் வரலாற்றில் இடம்பெறுவார் ரோகித் சர்மா" என்று அவர் கூறினார்.