டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
|20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
மும்பை,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் ரோகித் மற்றும் கோலி இருவரும் ஆட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து வரும் 11ம் தேதி தொடங்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருவரும் இடம் பிடித்துள்ளனர். மேலும், இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் ரோகித், கோலி இருவரும் இடம் பெற்றுள்ளதால் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 20 ஓவர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பை தொடரின்போது காயம் அடைந்தார். அதன் பின்னர் அவர் எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் ஆடாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
உடற்தகுதி தொடர்பான பிரச்சினை இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்க மாட்டார். அவர் தற்போது விளையாட முடியாத நிலையில் உள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரிலும் அவர் ஆடவில்லை. டெஸ்ட் தொடரில் ஆடமாட்டார். நேரடியாக ஐ.பி.எல்-ல்தான் ஆடுவார். இதனால் இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையிலும் ரோகித்சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.