டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம்?- கேப்டன் ரோகித் விளக்கம்
|இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இன்று முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
பெர்த்,
8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் கோலி 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டது. இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இந்திய அணி போல தடுமாறினாலும் பிறகு ஜோடி சேர்ந்த ஏடன் மார்க்ரம்- டேவிட் மில்லர் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 2 பந்துகள் மீதம் இருக்க தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை போராடிய இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் போட்டி முடிந்த கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கூறியதாவது:-
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். அதனால் தான் 134 என்ற எளிதான இலக்கை கூட எட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். ஆனால் மார்க்கரம் மற்றும் மில்லர் இணைந்து ஆட்டத்தை வெல்லும் வகையில் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நாங்கள் பில்டிங்கில் கடுமையாக சொதப்பினோம். கடும் குளிரால்தான் நாங்கள் கேட்ச்களை விட்டோம் என்று சூழ்நிலைகளை காரணம் சொல்ல நான் விரும்பவில்லை.
இதற்கு முன் இது போன்ற சூழலில் விளையாடி இருக்கிறோம். நாங்கள் பில்டிங்கில் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக தான் பில்டிங் செய்தோம். ஆனால் இன்று நிறைய வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
எங்களால் சில ரன் அவுட்டுகளை செய்ய முடியவில்லை. குறிப்பாக நானும் ரன் அவுட்டை மிஸ் செய்தேன் இந்த தோல்வியால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.