< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடம் மும்பையின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு

'Image Courtesy: ANI

கிரிக்கெட்

ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடம் மும்பையின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு

தினத்தந்தி
|
12 March 2024 10:45 AM IST

மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவது பாண்ட்யாவுக்கு கடினமாக இருக்கும் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.பி.எல்-ல் சென்னை மற்றும் மும்பை அணிகளில் விளையாடி ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடம் மும்பையின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடம் மும்பையின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும். அவருடைய தலைமையில் பாண்ட்யா சாதாரண வீரராக ஒரு வருடம் விளையாடி பின்னர் மும்பையின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ரோகித் சர்மா இப்போதும் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார்.

குஜராத் அணியிலிருந்து வந்ததும் மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவது பாண்ட்யாவுக்கு கடினமாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே மும்பை நிறைய கோப்பைகளை வென்றுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக அனைத்து நட்சத்திர வீரர்களையும் கையாள்வது பாண்ட்யாவுக்கு எளிதாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்