< Back
கிரிக்கெட்
இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா
கிரிக்கெட்

இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா

தினத்தந்தி
|
27 Jun 2024 3:04 AM IST

புதிய பந்தில் எப்படி இவ்வளவு சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்..? என்று இன்ஜமாம் உல்-ஹக் கேள்வி எழுப்பி இருந்தார்.

புதுடெல்லி,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர்8 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த நாட்டு தொலைக்காட்சி விவாதத்தில் அவர் பேசுகையில், 'ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15-வது ஓவரை (16-வது ஓவர்) இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் வீசினார். அப்போது அவர் வீசிய பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. 20 ஓவர் கிரிக்கெட் என்பதால் பந்து எப்படியும் புதிதாகவே இருக்கும். புதிய பந்தில் எப்படி இவ்வளவு சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? அப்படியென்றால் 12, 13-வது ஓவரிலேயே அதற்குரிய வேலை (பந்தை சுரண்டி சேதப்படுத்துதல்) நடந்திருக்கிறது.

நடுவர்கள் இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்ன என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அர்ஷ்தீப்சிங் போன்ற பவுலர் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்றால், நிச்சயம் பந்தை சேதப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும். இதையே பாகிஸ்தான் பவுலர் ஒருவர் செய்திருந்தால் சர்ச்சையாக்கி இருப்பார்கள்' என்றார். இதே புகாரை மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கும் முன்வைத்துள்ளார். இந்தியா போன்ற சில அணிகள் விளையாடும் போது நடுவர்கள் இது போன்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்' என்றார்.

இந்த நிலையில், அந்த ஆட்டத்தில் நடுவராக பணியாற்றிய ரிச்சர்ட் கெட்டில்போரப் (இங்கிலாந்து), 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய பவுலர் அர்ஷ்தீப்சிங் 2-வது ஓவரிலேயே பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்து பாகிஸ்தான் பேட்ஸ்மேனை வீழ்த்திய வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

இன்ஜமாமின் குற்றச்சாட்டு குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் நேற்று கேட்ட போது, 'இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது. பகல் நேரத்தில் வெயிலில் விளையாடும் போது ஆடுகளம் வறண்டு, பந்து தானாகவே ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். நாங்கள் மட்டுமல்ல, எல்லா அணிகளுமே பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்கின்றன. சில நேரம், என்ன பேசுகிறோம் என்பதை யோசித்து பேச வேண்டும்' என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்