முஷீர் கானை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரோகித் சர்மா
|கார் விபத்தில் சிக்கி காயமடைந்த முஷீர் கானை, ரோகித் சர்மா நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
லக்னோ,
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா "சி" அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். இதையடுத்து இரானி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருந்தார். ஆனால், இரானி கோப்பை தொடரில் விளையாட உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது முஷீர் கான் மற்றும் அவரது தந்தை கார் விபத்தில் சிக்கினர்.
இதையடுத்து இருவரும் உடனடியாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முஷீர் கானுக்கு கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் இரானி கோப்பை தொடரில் ஆடவில்லை. மேலும் இன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியிலும் அவர் ஆடவில்லை.
இந்நிலையில், கார் விபத்தில் சிக்கி காயமடைந்த முஷீர் கானை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை முஷீர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.