ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோகித் சர்மா?
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டெஸ்ட் தொடரின் முதல் அல்லது 2வது போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு போட்டியில் இருந்து அவர் விலக உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.