ஐ.பி.எல். கிரிக்கெட் கேப்டன்ஷிப்பில் தோனியை விட ரோகித் சர்மா சிறந்தவர் - இந்திய முன்னாள் வீரர்
|கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பில் தவறு இழைத்து நான் பார்த்ததில்லை.
மும்பை,
2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மாவை மாற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அந்த அணி நியமித்துள்ளது.
இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியதாவது, ஐ.பி.எல். போட்டி தொடரில் தோனியை விட ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் சிறந்தவர். ரோகித் தலைமையில் மும்பை அணி 2 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றுள்ளது.
கேப்டனாக அவர் களத்தில் நெருக்கடியான தருணத்தில் பொறுமையுடன் செயல்படாவிட்டால் அந்த மாதிரி வெற்றியை பெறுவது சாத்தியமில்லை. இதுபோன்ற பதற்றமான போட்டியில் சில சமயங்களில் தவறான முடிவுகள் எடுக்க நேரிடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பில் தவறு இழைத்து நான் பார்த்ததில்லை.
மாறாக தோனி கேப்டன்ஷிப்பில் நீங்கள் தவறுகளை பார்த்து இருக்க முடியும். முக்கியமான தருணங்களில் பவன் நெகி போன்ற அனுபவம் இல்லாத வீரர்களுக்கு பவுலிங் வாய்ப்பு அளித்து டோனி தவறான முடிவுகளை எடுத்துள்ளார். டோனி எப்போதும் செயல்முறைகளை எளிதாக வைத்திருக்க ஆலோசனை வழங்குவார். ஆனால் அதை களத்தில் நடைமுறைபடுத்துவதில் ரோகித் சர்மா கைதேர்ந்தவர். இவ்வாறு அவர் கூறினார்.