ரோகித் அவுட்... கொண்டாடிய சி.எஸ்.கே. ரசிகர் அடித்து கொலை; நண்பர்கள் வெறிச்செயல்
|ரோகித் சர்மா அவுட்டானதும், திபிலே கூறிய சில கருத்துகளால் ரோகித்தின் தீவிர ரசிகரான ஜாஞ்சேவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது.
கோலாப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 27-ந்தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. 278 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா விளையாடினர். போட்டியில், ரோகித் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை கொண்டாடிய ஒருவர், நண்பராலேயே அடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மராட்டியத்தின் கோலாப்பூர் நகரில் அனுமந்த்வாடி கிராமத்தில், இந்த போட்டியை காண்பதற்காக பந்தோபண்ட் திபிலே (வயது 63) என்பவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அதே வீட்டுக்கு திபிலேவின் மற்றொரு நண்பரான பலவந்த் ஜாஞ்ஜே (வயது 50) என்பவரும் வந்துள்ளார்.
இருவரும் நண்பரின் வீட்டில் ஐ.பி.எல். போட்டியை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். திபிலே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர். அப்போது, ரோகித் சர்மா அவுட்டானதும், அதனை திபிலே மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். ஆனால் ஜாஞ்சே, ரோகித்தின் தீவிர ரசிகர் ஆவார்.
திபிலே கூறிய சில கருத்துகளால் ஜாஞ்சேவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜாஞ்சே உடனே அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர், மருமகன் சாகர் என்பவரை அழைத்து கொண்டு திரும்பி வந்த ஜாஞ்சே, திபிலேவை அடித்து, உதைத்துள்ளார். மரப்பலகை மற்றும் கம்பு ஒன்றை வைத்து சாகர் கடுமையாக தாக்கினார். இதனால், திபிலே மயங்கி தரையில் சரிந்து விழுந்துள்ளார்.
இதன்பின் அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி திபிலே உயிரிழந்து விட்டார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திபிலேவின் நண்பர் மற்றும் மருமகன் சாகர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கிரிக்கெட் விளையாட்டுக்காக நண்பர்களுக்குள் மோதல், வெறி ஏற்பட்டு அது ஒருவரை கொலை செய்ய தூண்டும் அளவுக்கு சென்றது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.