ரோகித், கோலி அல்ல...இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர் தான் - ரவிச்சந்திரன் அஷ்வின்
|இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
நாக்பூர்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ந் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றினால் தான் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்திய அணி ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்திய அணியின் ஆடும் லெவன் அணியை தேர்ந்தெடுப்பதில் கேப்டன் ரோகித் என்ன செய்வார்? என எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. பேட்டிங்கில் ரோகித், கில், புஜாரா, கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன், கே.எஸ்.பரத் என பேட்ஸ்மேன்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை விட இந்திய அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பு ஸ்ரேய்ஸ் அய்யர் தான் என இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் உடன் அதிகப்போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய வீரர் ஸ்ரேயஸ் அய்யர் தான். அப்படி இருந்துமே அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முதுகெலும்பாக இருந்து வருவது ஸ்ரேயஸ் அய்யர் தான்.
பண்ட் இல்லாத சமயத்தில் அவர்தான் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன். அவருக்கு தற்போது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது போல அஸ்வின் பேசியுள்ளார்.