கோலி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதில் ரோகித் உறுதியாக உள்ளார் - கீர்த்தி ஆசாத்
|கோலி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதில் ரோகித் உறுதியாக உள்ளதாக கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று சற்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர்.
ஆனால் அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்குத்தான் பாதிப்பை கொடுக்கும் என்று ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எது எப்படி இருந்தாலும் விராட் கோலி கண்டிப்பாக டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மா உறுதியாக தெரிவித்துள்ளதாக முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- " ரோகித் சர்மாவிடம் இது பற்றி ஜெய் ஷா கேட்டார். ஆனால் எந்த நிலையிலும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு விராட் கோலி தேவை என்று ரோகித் சர்மா சொல்லி விட்டார். எனவே விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார். அணி தேர்வுக்கு முன்பாக அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.