தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெற ரோகித் மற்றும் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் - கவுதம் கம்பீர்
|தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை அங்கு இந்தியா வென்றதில்லை.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், '"இத்தொடரில் வெற்றி பெற ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும். ஏனெனில் அவர்களிடம் அந்த அனுபவம் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் நம் பவுலர்கள் நிச்சயமாக உங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் கட்டுப்படுத்துவதற்கு தேவையான ரன்களை பேட்ஸ்மேன்கள் எடுக்க தவறினால் அதுவே பவுலர்கள் மீது அழுத்தத்தை உண்டாக்கும். வேகம், பவுன்ஸ் ஆகியவற்றால் தென் ஆப்பிரிக்காவில் உங்களின் பேட்டிங் அழுத்தத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2011இல் இருந்த தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் தற்போது இல்லாமல் இருந்தாலும் ரபாடா, கோட்சி, மார்கோ யான்சென் ஆகியோரால் அவர்களின் பவுலிங் நன்றாகவே இருக்கிறது. மறுபுறம் இந்திய அணியில் முகமது ஷமி இருந்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அதனால் தற்போது இந்திய பவுலர்களும் அழுத்தத்தில் விளையாடுவார்கள். குறிப்பாக சற்று இளமையாகவே இருக்கும் சிராஜ் பவுலிங் இந்த தொடரில் சோதனை செய்யப்படும்" என்று கூறினார்.