பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி வேட்புமனு தாக்கல்- போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
|பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை,
பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக ஜெய் ஷா கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் புதிய தலைவர்களுக்கான தேர்தல் பணிகள் பிசிசிஐ வட்டாரத்தில் தொடங்கியுள்ளன.
இந்த தேர்தல் வரும் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உயர் பதவிகளில் 6 வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் அந்த முறையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் கங்குலி மற்றும் ஜெய்ஷா மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே கங்குலி, ஜெய் ஷா உள்ளிட்ட பல பிசிசிஐ பிரமூகர்கள் இடையே ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கங்குலி தேர்தலில் நிற்க வேண்டாம் எனவும், ஜெய் ஷா மீண்டும் செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதை தொடர்ந்து தற்போதைய கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவரான ரோஜர் பின்னி, பிசிசிஐன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னியும், பொருளாளர் பதவிக்கு ஆஷிஷ் ஷெலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ரோஜர் பின்னி 1979ல் இருந்து 1987 வரை இந்திய அணிக்காக விளையாடியர். இவர் 1983-ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதால் அவர் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு எடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.