ரிஸ்வான், சாத் ஷகீல் அபார சதம்.. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர்
|வங்காளதேசம் - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான் சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. மழை பாதிப்பு காரணமாக ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தான் ஆரம்பமானது.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 41 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் அடித்திருந்தது. சாத் ஷகீல் 57 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் மற்றுக் ஹசன் மக்முத் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் - சாத் ஷகீல் இணை பலம் சேர்த்தது. இருவரும் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்து அசத்தினர். சதம் அடித்த பின்பும் சிறப்பாக விளையாடிய சாத் ஷகீல் 141 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஆஹா சல்மான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 150 ரன்களை கடந்து, பாகிஸ்தான் 400 ரன்களை கடக்க உதவினார்.
பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. முகமது ரிஸ்வான் 171 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் இருந்தார்.
இதனையடுத்து வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கி பேட்டிங் செய்து வருகிறது.