நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரிஷப் பண்ட்...களத்தில் நடந்தது என்ன..?
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ - டெல்லி இடையேயான ஆட்டத்தின்போது கள நடுவருடன் ரிஷப் பண்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 18.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் பிரேசர் அரை சதம் அடித்தார்.
முன்னதாக இந்த போட்டியில் லக்னோ அணி பேட்டிங் செய்தபோது, டெல்லி கேப்டன் பண்ட் டிஆர்எஸ் அழைப்பு தொடர்பாக கள நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். லக்னோ அணி பேட்டிங் செய்தபோது 4வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீச அதனை படிக்கல் எதிர்கொண்டார்.
இதில் ஒரு பந்து படிக்கல்லுக்கு லெக் சைடில் சென்றது . கள நடுவர் வைட் சைகை காட்டினார். பண்ட் அதனை எதிர்த்து டிஆர்எஸ் அப்பீல் செய்தார். ரீப்ளேயிலும் அது வைடு என்று காட்டியது. இதனால் கோபமடைந்த பண்ட் கள நடுவரான ரோகன் பண்டித் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.