நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியது வித்தியாசமான உணர்வை தருகிறது - ரிஷப் பண்ட்
|20 ஓவர் உலகக் கோப்பை போட்டி, அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமடைவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
நியூயார்க்,
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் உயிர்தப்பினார். கால்முட்டிக்கு ஆபரேஷன், அதில் இருந்து மீள்வதற்கான தொடர் சிகிச்சை, பயிற்சி என்று 15 மாதங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தார். ஐ.பி.எல். மூலம் மறுபிரவேசம் செய்த அவர் அதில் அபாரமாக ஆடியதால் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கும் தேர்வானார்.
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்காக அமெரிக்காவில் பயிற்சியை தொடங்கியுள்ள 26 வயதான ரிஷப் பண்ட் கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், 'நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய சீருடையில் களத்திற்கு திரும்பியிருப்பது வித்தியாசமான உணர்வை தருகிறது. நான் ரொம்ப தவற விட்ட ஒரு விஷயம் இது தான். சக வீரர்களை மீண்டும் சந்திப்பதும், அவர்களுடன் ஜாலியாக உரையாடுவதும், நேரத்தை செலவிடுவதும் உண்மையிலேயே உற்சாகம் அளிக்கிறது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் வளர்ந்து வருகிறது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி, அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமடைவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன். அமெரிக்க ஆடுகளங்கள் எல்லாமே புதுசு. வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. இங்குள்ள சூழலுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்கிறேன். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடுவேன் என்று நம்புகிறேன்' என்றார்.