ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார் - இந்திய முன்னாள் வீரர்
|ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த கூறியுள்ளார்.
சென்னை,
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இவ்விரு தொடர்களுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடரில் 2 போட்டியில் 17 ரன் மட்டும் எடுத்த இவர், 2 ஒருநாள் போட்டியில் 15 ரன் மட்டும் எடுத்துள்ளார். தவிர இவர், நடப்பு ஆண்டில் இதுவரை விளையாடிய 11 ஒருநாள் போட்டியில், 326 ரன் (சராசரி 40.75, ஸ்டிரைக் ரேட் 98.19) மட்டும் எடுத்துள்ளார்.
ஆனால், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 10 ஒருநாள் போட்டியில், 284 ரன் (சராசரி 71.00, ஸ்டிரைக் ரேட்105.57) எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 36 ரன் (38 பந்து) விளாசினார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
ரிஷாப் பன்ட், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே நிறைய பேர், பன்ட் சொதப்புகிறார் என பேசத் துவங்கிவிட்டனர். இதற்கேற்ப இவர், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்படுகிறார்.
தனக்குத் தானே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்கிறார். இழந்த பார்மை மீட்டு, எழுச்சி பெறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக இவர், சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது. தேர்வுக்குழுவினர், அடுத்து வரும் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.