வங்காளதேச அணிக்காக பீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட் ... வீடியோ வைரல்
|ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, வங்காளதேச அணிக்காக பீல்டிங் செட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்தியா 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது.
முன்னதாக இந்திய அணியின் 2-வது இன்னிங்சின்போது டிரிங்ஸ் பிரேக்கிற்கு பின் வங்காளதேச அணியின் கேப்டன் சாண்டோ பீல்டிங் செட் செய்து கொண்டிருந்தார். அப்போது கவர்ஸ் திசையில் எந்த பீல்டரும் இல்லாமல் இருப்பதை கவனித்த ரிஷப் பண்ட், உடனடியாக வங்காளதேச கேப்டன் சாண்டோவை அழைத்து இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்க.. ஒரு பீல்டரை நிறுத்தலாம் என்று கூறினார். இதனை சிரித்து கொண்டே ஏற்றுக் கொண்ட சாண்டோ உடனடியாக ஒரு பீல்டரை கவர்ஸ் திசையில் நிறுத்தினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.