சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர் - இந்திய முன்னாள் வீரர்
|விக்கெட் கீப்பிங் திறமையை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தால் சாம்சனை விட ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பானவராக இருக்கிறார்.
மும்பை,
20 அணிகள் கலந்துகொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்களும், பாண்ட்யா 40 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 20 ஓவர்களில் வெறும் 122 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சாம்சன் 6 பந்தை சந்தித்த அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 32 பந்தில் ஆட்டம் இழக்காமல் 53 ரன் எடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, விக்கெட் கீப்பிங் திறமையை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தால் சாம்சனை விட ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பானவராக இருக்கிறார். நான் இங்கு பேட்டிங் பற்றி கூறவில்லை. ஆனால் அதுவும் பார்க்க வேண்டிய ஒரு அம்சம்தான்.
சாம்சன் கடைசி கட்ட ஐ.பி.எல் தொடரில் இருந்து சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் ஐ.பி.எல் சீசனை அவர் தொடங்கிய விதத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் டி20 வடிவத்தில் கடந்த மூன்று நான்கு போட்டிகளாக நன்றாக விளையாடவில்லை.
அவர் வங்காளதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கிடைத்த ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். அவர் அரை சதம் அடித்திருந்தால் இங்கு பேச்சே இருந்திருக்காது. அடுத்து ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் யோசிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.