< Back
கிரிக்கெட்
தல தோனியின் அட்வைஸை பகிர்ந்த ரிங்கு சிங்!

image courtesy; instagram/ rinkukumar12

கிரிக்கெட்

'தல' தோனியின் அட்வைஸை பகிர்ந்த ரிங்கு சிங்!

தினத்தந்தி
|
24 Nov 2023 11:19 AM GMT

இந்த ஆட்டத்தில் 14 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

விசாகப்பட்டினம்,

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா அணி இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 7 ரன் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசினார். முதல் பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் உதிரியாக ஒரு ரன் வந்தது. 3-வது பந்தில் அக்ஷர் பட்டேல் (2 ரன்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4-வது பந்தில் ரவி பிஷ்னோய் ரன்-அவுட் ஆனார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடுகையில் அர்ஷ்தீப் சிங் ரன்-அவுட்டில் சிக்கினார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அது 'நோ-பால்' என்று நடுவர் அறிவித்ததால் அந்த சிக்சருக்கு உரிய ரன் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை. நோ பாலுக்குரிய ஒரு ரன் வந்தது.

19.5 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. ரிங்கு சிங் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதி நேரத்தில் எந்த ஒரு பதட்டமும் இன்றி 14 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்த வேளையிலும் எந்த ஒரு இடத்திலும் நிதானத்தை தவற விடாத ரிங்கு சிங் போட்டியை கூலாக சிக்ஸ் அடித்து முடித்துக் கொடுத்தார். அவரது இந்த ஆட்டத்தை பார்த்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருடைய ஆட்டம் அப்படியே தோனியுடன் ஒத்து போவதாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து பேசிய ரிங்கு சிங் கூறுகையில்;- 'நான் 2 முறை தோனியுடன் உரையாடியுள்ளேன். அவர் அழுத்தத்தின் கீழ் எப்படி அமைதியாக இருப்பது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் அதனைத்தான் பின்பற்றி வருகிறேன்' என கூறினார்.

மேலும் செய்திகள்