< Back
கிரிக்கெட்
ஓய்வு பெறும் எண்ணம் என்னுடைய மனதில் இல்லை - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

image courtesy; AFP

கிரிக்கெட்

ஓய்வு பெறும் எண்ணம் என்னுடைய மனதில் இல்லை - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

தினத்தந்தி
|
17 Jan 2024 2:52 PM IST

சீக்கிரம் ஓய்வு பெறுவேன் என்ற எண்ணத்தில் இப்போதெல்லாம் தம்மை பார்க்கும் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதாக ஆண்டர்சன் கூறியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. 41 வயதை கடந்தும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடுவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவருடைய பார்ட்னரான ஸ்டூவர்ட் பிராட் 38 வயதில் கடந்த ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் சீக்கிரம் ஓய்வு பெறுவேன் என்ற எண்ணத்தில் இப்போதெல்லாம் தம்மை பார்க்கும் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதாக ஆண்டர்சன் கூறியுள்ளார். ஆனால் இப்போதைக்கு அந்த எண்ணமே இல்லை என தெரிவிக்கும் அவர் இது குறித்து கூறியது பின்வருமாறு;- "இப்படி சொல்வது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஓய்வு பெறும் எண்ணம் என்னுடைய மனதில் இப்போதில்லை. நிறைய பேர் என்னிடம் வந்து சிறந்த கெரியர்க்காக வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

அவர்களிடம் நான் ஸ்டூவர்ட் பிராட் கிடையாது என்று விளக்கம் கொடுத்து வருகிறேன். ஏனெனில் இப்போதும் என்னால் அணிக்காக பங்காற்ற முடியும் என்று கருதுகிறேன். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் இங்கிலாந்துக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் திறமையை கொண்டிருப்பதாக நம்புகிறேன். வயது காரணமாக கெரியரை முடிக்க நான் விரும்பவில்லை. இதற்கு முன் விளையாடாத பவுலர்கள் இம்முறை விளையாடுகின்றனர். எனவே இந்தியாவில் உள்ள பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் சவால்களைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு கொடுப்பது என்னுடைய கடமையாகும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்