ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்... எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த சச்சின்....!
|பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.
மும்பை,
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த போட்டியுடன் டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு அதிரடியான டி20 பேட்டராக இருந்து ஒரு நெகிழ்ச்சியான டெஸ்ட் வீரராக மாறியுள்ளீர்கள், டேவிட் வார்னர். உங்களது பயணம் தகவமைப்பு மற்றும் மன உறுதி ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. கிரிக்கெட்டில் அவரது மாற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இன்னிங்சை வேகப்படுத்துவதில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அற்புதமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள், டேவிட்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.