விராட் கோலி 100 சதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடிக்க வேண்டும்- சோயிப் அக்தர் விருப்பம்
|சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது.
சென்னை,
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பதை பார்க்க விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிராக 59 ரன்கள் குவித்தார். சர்வதேச அளவில் விராட் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது.
இதனால் ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்கும் போதும் அவர் மீண்டும் பார்முக்கு வர வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கோலி குறித்து சோயிப் அக்தர் பேசியதாவது:
ஆசிய கோப்பையின் 2 போட்டிகளிலும் விராட் கோலி பந்தை சிறப்பாக எதிர்கொள்ளவில்லை. 20 ஓவர் கிரிக்கெட் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்க அவர் டி20 உலகக் கோப்பை வரை காத்திருக்க வேண்டும்.
விராட் கோலி என்றென்றும் சிறந்த வீரராக முடியும். கோலி மேலும் 30 சதங்கள் அடிக்க வேண்டும். நிச்சயமாக கடினமான 30 சதங்களாக இருக்கும். கோலி 100 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. ஆனால் கோலியால் நிச்சயம் அதைச் செய்ய முடியும்.
இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.