இதை செய்யாத வரை ஆர்.சி.பி அணியால் கோப்பையை வெல்ல முடியாது - மைக்கேல் வாகன்
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் டிராவிஸ் ஹெட் 102 ரன், கிளாசென் 67 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல ஆர்.சி.பி அணி தோல்வியடைந்த அனைத்து ஆட்டங்களிலும் அந்த அணி சரியாக பந்துவீசாததே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி, மேக்ஸ்வெல், வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு பெங்களூரு நிர்வாகம் காலம் காலமாக கோடிகளை இறைத்து வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
அதனால் தரமான வீரர்களை குறைந்த விலையில் வாங்கும் யுக்தியை அந்த அணி எப்போதும் கடைபிடிப்பதில்லை என்றும், எனவே நட்சத்திர வீரர்களை பெரிய தொகைக்கு வாங்கினால் கோப்பையை வென்று விடலாம் என்ற பெங்களூருவின் கனவு பலிக்காது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆர்.சி.பி ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை என்பது கிரிக்கெட் தனிநபர் விளையாட்டல்ல குழு விளையாட்டு என்பதை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. உங்களால் அனைத்து பெரிய வீரர்களையும் வாங்க முடியும். ஆனால் அவர்களை ஒரு அணியில் போட்டால் வெற்றி பெற முடியும் என்று அர்த்தமல்ல. அது ஆர்.சி.பி அணியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விராட் கோலி, வில்லியர்ஸ், டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல் போன்ற நம்ப முடியாத வீரர்களை வாங்கினார்கள். இருப்பினும் அவர்கள் ஒவ்வொரு வீரர்களின் வேலையை தெளிவுபடுத்தி அசத்துவதற்கான வாய்ப்பை வழங்கினார்களா என்று தெரியவில்லை. அவர்கள் வித்தியாசமாக எதையும் முயற்சித்ததாகவும் தெரியவில்லை.
நம்முடைய அணியில் மகத்தான வீரர்கள் இருப்பதால் வெற்றி பெற்று விடலாம் என்று அவர்கள் நினைப்பது போல் தெரிகிறது. ஆனால் மகத்தான வீரர்களை கொண்டிருந்தாலும் நீங்கள் அவர்களை ஒரே அணியின் கலாச்சாரத்தில் கொண்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு வீரர்களின் வேலையை தெளிவாக கண்டறிய வேண்டும். அதை செய்யாத வரை நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.