ஆர்.சி.பி. அணியிலிருந்து சாஹல் கழற்றி விடப்பட்டது ஏன்? மைக் ஹெசன் விளக்கம்
|2013 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஆர்.சி.பி. அணியின் முதன்மை ஸ்பின்னராக சாஹல் விளையாடினார்.
பெங்களூரு,
இந்தியாவில் நடத்தப்படும் டி20 தொடரான ஐ.பி.எல்.ன் 17-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, டு பிளெஸ்சிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( ஆர்.சி.பி.) அணி இந்த வருடம் தங்களது முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் பல சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
முன்னதாக 2013 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஆர்.சி.பி. அணியின் முதன்மை ஸ்பின்னராக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த யுஸ்வேந்திர சாஹலை பெங்களூரு அணி நிர்வாகம் 2022 சீசனில் கழற்றி விட்டது. அப்போது பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்பியும் யாருமே தம்மை தொடர்பு கொள்ளாமல் கழற்றி விட்டதாக சாஹல் ஆதங்கமாக பேட்டி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் 2022 ஏலத்தில் சாஹலை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாமல் போனதாக பெங்களூரு அணியின் முன்னாள் இயக்குனர் மைக் ஹெசன் கூறியுள்ளார். மேலும் நேரடி ஏலத்தில் வாங்க முயற்சித்தபோது 65வதாக சாஹல் பெயர் வந்ததால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று விளக்கம் தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-
"சாஹல் அதற்காக மிகவும் அதிருப்தியில் இருந்தார் என்பது எனக்கு தெரியும். அந்த நேரத்தில் ஏல இயக்கவியலை அவருக்கு விளக்க முயற்சிப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவர் மீது குறை கூறவில்லை. ஆர்.சி.பி. அணியின் உண்மையான வீரராக இருந்ததால் அவர் விரக்தியடைந்தார். ஆனால் ஏலத்தில் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அவர் நன்கு அறிந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.
நாங்கள் அந்த சீசனில் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்தோம். ஏனெனில் நாங்கள் ஹர்சல் படேல் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் ஏலத்தில் வாங்க விரும்பினோம். அதற்காக 3 வீரர்களை மட்டும் தக்க வைத்ததால் எக்ஸ்ட்ரா ரூ.4 கோடி எங்களுக்கு கிடைத்தது. ஆனால் ஐ.பி.எல். தொடரின் முதன்மை வீரராக இருந்தும் அவருடைய பெயர் நட்சத்திர வீரர்களின் பட்டியலில் வராதது இப்போதும் எனக்கு விரக்தியாக இருக்கிறது. குறிப்பாக 65-வது பெயராக வந்ததால் அவரை எங்களால் ஏலத்தில் எடுக்க முடியவில்லை " என்று விளக்கம் அளித்துள்ளார்.