ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஆர்சிபி நட்சத்திர பேட்ஸ்மேன் - ரசிகர்கள் அதிர்ச்சி...!
|ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு,
16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வருட ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அவரை வெற்றியுடன் வழி அனுப்ப கடுமையாக முயற்சிப்பர்.
இந்த முறை கோப்பயை வெல்ல ஆர்சிபி அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரஜத் படிதார் விலகுகிறார் என ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆர்சிபி அணி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
துரதிருஷ்டவசமாக, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல்2023ல் இருந்து ரஜத் படிதார் வெளியேறுகிறார். ரஜத் விரைவில் குணமடைய விரும்புகிறோம், மேலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். ரஜத்துக்கு மாற்று வீரரை தற்போது அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன்னரே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ரஜத் படிதார் ஐபிஎல்லில் பாதி தொடருக்கு பின்னர் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது காயம் முழுமையாக குணம் அடைய சிறிது காலம் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் விலகுகிறார் என ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.