சி.எஸ்.கே-வில் கிடைப்பது போல் ஆர்.சி.பி. அணியில் வீரர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை - இந்திய முன்னாள் வீரர்
|சஹால் சிறந்த பவுலராக செயல்பட்டும் தக்க வைக்கப்படவில்லை. அவர் இந்த விளையாட்டின் ஒரு லெஜெண்ட்.
மும்பை,
ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று முன் தினம் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூர் தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 83 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நடப்பி ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இப்போதைய ஆர்.சி.பி அணியில் சிராஜ் தவிர்த்து தரமான பவுலர் இல்லை என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். மேலும், சி.எஸ்.கே அணியில் வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பது போல் பெங்களூரு அணியில் வீரர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆர்.சி.பி அணியில் பவுலர்கள் எங்கே..?. ஐ.பி.எல் 2024 தொடரில் அவர்களிடம் நல்ல பவுலர்கள் இல்லை. என்னைப் பொறுத்த வரை அதுவே கவலையளிக்கும் விஷயமாகும். சஹால் விஷயத்தில் அவர்கள் என்ன செய்தனர்?. சஹால் சிறந்த பவுலராக செயல்பட்டும் தக்க வைக்கப்படவில்லை. அவர் இந்த விளையாட்டின் ஒரு லெஜெண்ட். அவர்களிடம் ஹசரங்காவும் இருந்தார். அவரையும் பெங்களூரு கழற்றி விட்டது.
இது போன்ற பெரிய வீரர்களை விடுவித்து விட்டு உங்களால் வெற்றி பெற முடியாது. சிராஜை தவிர்த்து போட்டியை வென்று கொடுக்கக்கூடிய பவுலர்கள் அவர்களிடம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சிராஜூம் சுமாரான பார்மில் இருக்கிறார். கொல்கத்தாவுக்கு எதிராக கரண் சர்மாவையும் அவர்கள் பெஞ்சில் அமர வைத்தனர். அவர்கள் எப்போதும் வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை.
சிவம் துபேவிடம் இருந்து ஆ.ர்சி.பி அணியால் சிறந்த செயல்பாடுகளை கொண்டு வர முடியவில்லை. ஆனால் தற்போது சி.எஸ்.கே அணிக்கு போட்டிகளை வென்று கொடுக்கும் சிவம் துபே 2023 கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ஆர்.சி.பி அணியில் துபே அசத்தவில்லை. உண்மையில் சி.எஸ்.கே அணியில் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆர்.சி.பி அணியில் நிலைமை வேறு மாதிரி உள்ளது. துபேவை நீங்கள் 5 அல்லது 6-வது இடத்தில் களமிறக்கினால் அவர் அசத்த மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.