< Back
கிரிக்கெட்
சிறந்த பீல்டருக்கான தங்கப்பதக்கம் பெற்ற ரவீந்திர ஜடேஜா!
கிரிக்கெட்

சிறந்த பீல்டருக்கான தங்கப்பதக்கம் பெற்ற ரவீந்திர ஜடேஜா!

தினத்தந்தி
|
17 Nov 2023 11:39 AM IST

உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறந்த பீல்டராக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் அந்த ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்து 3 கேட்சுகள் பிடித்து அசத்தினார். அதனால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, முந்தைய ஆட்டத்தில் சிறந்த பீல்டர் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் தங்கப்பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.

மேலும் செய்திகள்