இந்திய அணியிலேயே ரவி பிஷ்னோய்தான் முதல் ஆளாக அதை செய்து முடிப்பார் - அர்ஷ்தீப் சிங்
|கடினமாக உழைக்கும் ரவி பிஷ்னோய் வேகமாக விக்கெட்டுகளை எடுப்பதாக அர்ஷ்தீப் சிங் பாராட்டியுள்ளார்.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
முன்னதாக இந்தத் தொடரில் முதன்மை ஸ்பின்னராக தேர்வான ரவி பிஷ்னோய் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக 2வது போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்திய அணியில் இருப்பதிலேயே ரவி பிஷ்னோய் தான் முதல் ஆளாக வேகமாக சாப்பிட்டு முடிப்பார் என்ற கலகலப்பான பின்னணியை அர்ஷ்தீப் சிங் பகிர்ந்துள்ளார். அதே போல கடினமாக உழைக்கும் அவர் வேகமாக விக்கெட்டுகளையும் எடுப்பதாக அர்ஷ்தீப் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரவி பிஷ்னோய் மிகப்பெரிய இதயத்தை கொண்டவர். அதனாலேயே அவர் நிறைய தைரியமான பந்துகளை வீசுவார். அதற்கான பரிசுகளை அவர் தற்போது பெறுகிறார். தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் நன்றாக விளையாடியுள்ளார். குறிப்பாக முதல் போட்டியில் அடி வாங்கிய அவர் கடைசியில் விக்கெட் எடுத்து வலுவான கம்பேக் கொடுத்தார். 2வது போட்டியிலும் அசத்திய அவர் அதற்காக பின்னணியில் கடினமாக உழைக்கிறார்.
நானும் அவரும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நல்ல உறவை கொண்டுள்ளோம். ஆனால் ரவி பிஸ்னோய் எப்போதும் அவசரம் பிடித்தவர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் தன்னுடைய உணவை மிகவும் வேகமாக சாப்பிடுவார். சாப்பிட்டு முடித்ததும் அவர் வேகமாக தனது ஹோட்டல் அறைக்கு சென்று விடுவார். அப்படி இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் அவர் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்" என்று கூறினார்.