< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பித்த ரஷித் கான்!

image courtesy; AFP

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பித்த ரஷித் கான்!

தினத்தந்தி
|
16 Oct 2023 10:25 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது . அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 80 (57) ரன்களும், இக்ரம் 58 (66) ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரஷித் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜோஸ் பட்லர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தார். வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ரஷித் கான்,' ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும். சமீபத்தில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அனைத்தையும் இழந்தனர். இந்த வெற்றி அவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை தரும். இந்த வெற்றி அவர்களுக்கானது' என உணர்ச்சிவசத்துடன் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்