ரஞ்சி கோப்பை: 2-வது அணியாக விதர்பா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|விதர்பா இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
நாக்பூர்,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழக அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா - மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த விதர்பா முதல் இன்னிங்சில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேசம் 252 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹிமான்சு மந்த்ரி 126 ரன்கள் குவித்தார்.
பின்னர் 82 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய விதர்பா யாஷ் ரத்தோடின் அபார சதத்தின் மூலம் 402 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேசம் 258 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 62 ரன்களில் வெற்றி பெற்ற விதர்பா 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது.
விதர்பா இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் வரும் 10-ம் தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது.