ரஞ்சி டிராபி; இன்னிங்ஸ் மற்றும் 129 ரன் வித்தியாசத்தில் ரெயில்வே அணியை வீழ்த்திய தமிழ்நாடு
|தமிழக அணி தரப்பில் ஜெகதீசன் இரட்டை சதம் (245 ரன்கள்) அடித்து அசத்தினார்.
கோவை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது 3-வது லீக்கில் ரெயில்வேயுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 489 ரன்கள் குவித்தது. தமிழக அணி தரப்பில் ஜெகதீசன் இரட்டை சதம் (245 ரன்கள்) அடித்து அசத்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 79.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. ரெயில்வே அணி தரப்பில் பிரதம் சிங் 92 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர், சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி தமிழக வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெறும் 44 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ரெயில்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ரெயில்வே அணி தரப்பில் அதிகபட்சமாக பிரதம் சிங் 29 ரன்கள் எடுத்தார். இதன் மூதல் இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.