ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்..!
|ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
பெங்களூரு,
இந்தியாவின் பிரதான முதல் தர போட்டியான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் அரைஇறுதி ஆட்டம் (5 நாள் ஆட்டம்) ஒன்றில் 41 முறை சாம்பியனான மும்பை அணி , உத்தரபிரதேசத்தை எதிர்கொள்கிறது.
மும்பை அணி கால்இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டை வீழ்த்தி முதல் தர போட்டியில் புதிய வரலாறு படைத்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணியில் பேட்டிங்கில் கால்இறுதியில் சதம் அடித்த ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான், இரட்டை சதம் அடித்த அறிமுக வீரர் சுவேத் பார்கர், அர்மான் ஜாப்பர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹர்திக் தாமோர் களம் இறங்குகிறார். பந்து வீச்சில் தவால் குல்கர்னி, துஷர் தேஷ்பாண்டே, மொகித் அவாஸ்தி, ஷம்ஸ் முலானி ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
கரண் ஷர்மா தலைமையிலான உத்தரபிரதேச அணி கால்இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. உத்தரபிரதேச அணியில் பேட்டிங்கில் ரிங்கு சிங், பிரியம் கார்க்கும், பந்து வீச்சில் யாஷ் தயாள், அங்கித் ராஜ்புத், சவுரப் குமாரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வலுவான மும்பை அணியின் சவாலை போதிய அனுபவம் இல்லாத வீரர்களை கொண்ட உத்தரபிரதேச அணி தாக்குப்பிடிப்பது சற்று கடினம் தான் எனலாம்.
பெங்களூருவை அடுத்துள்ள ஆலூரில் இன்று தொடங்கும் மற்றொரு அரைஇறுதியில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணி, மத்தியபிரதேசத்தை சந்திக்கிறது. பெங்கால் அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜார்கண்டை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் முதல் 9 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மத்தியபிரதேச அணி கால்இறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. பேட்டிங்கில் பலம் வாய்ந்த பெங்கால் அணி கால்இறுதியில் காட்டிய உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தால் அந்த அணியின் கையே ஓங்கும்.