ரஞ்சி டிராபி: பஞ்சாபை வீழ்த்தியது சவுராஷ்டிரா - அரையிறுதியில் கர்நாடக அணியுடன் மோதல்...!
|ரஞ்சி டிராபி தொடரின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - மத்திய பிரதேசம் அணிகள் மோதுகின்றன
ராஜ்கோட்,
ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், ஆந்திரா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், சவுராஷ்டிரா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
இதில் காலிறுதி ஆட்டங்களில் ஜார்கண்ட்-பெங்கால், ஆந்திரா-மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா-பஞ்சாப், உத்தரகண்ட்-கர்நாடகா அணிகள் மோதின. இதில் ஜார்கண்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்கால் அணியும், ஆந்திராவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மத்திய பிரதேசமும், உத்தரகாண்ட்டை 281 மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடக அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.
இந்நிலையில், ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பஞ்சாப் அணிகள் மோதும் கால்இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 303 ரன்னும், பஞ்சாப் அணி 431 ரன்னும் சேர்த்தன. 128 ரன்கள் பின்தங்கிய சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் 379 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிரேராக் மன்கட் 88 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வினய் சவுத்ரி 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதி ஆட்டங்களில் பெங்கால் - மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா - கர்நாடகம் அணிகள் மோதுகின்றன. அரையிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 8ந் தேதி தொடங்குகின்றன.