ரஞ்சி கோப்பை: தமிழக அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை
|ரஞ்சி கோப்பை தொடரின் ஒரு அரையிறுதி போட்டியில் தமிழகம் - மும்பை அணிகள் மோதின.
மும்பை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு அரையிறுதி போட்டியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தனது முதல் இன்னிங்சை விளையாடிய தமிழகம் 146 ரன்களில் சுருண்டது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி தமிழக பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தது.
அந்த அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர் 109 ரன்களும், தனுஷ் கோட்டியான் 89 ரன்களும் குவித்தனர். தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 232 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி முதல் இன்னிங்சை போலவே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 51.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தமிழகம் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற மும்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
தமிழக அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 70 அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. மும்பை அணியில் அதிகபட்சமாக ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.