ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிராவை வீழ்த்தியது அரியானா
|வதோதராவில் நடந்த ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் பரோடா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்தியது.
சவுராஷ்டிரா,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா - அரியானா இடையிலான (ஏ பிரிவு) லீக் ஆட்டம் கடந்த 12-ந்தேதி சவுராஷ்டிராவில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 145 ரன்னும், அரியானா 200 ரன்னும் எடுத்தன. 55 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாளான இன்று தொடர்ந்து பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் 220 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இடக்கை சுழற்பந்துவீச்சாளர் நிஷாந்த் சிந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 166 ரன்கள் இலக்கை அரியானா அணி 59.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் அசோக் மெனேரியா 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
தமிழ்நாடு- திரிபுரா (பி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் மோசமான வானிலையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. 2-வது நாளில் ஆடிய தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. பனிப்பொழிவு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாளிலும் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இந்த ஆட்டம் 'டிரா'வில் முடிவது உறுதியாகி விட்டது.
வதோதராவில் நடந்த 'டி' பிரிவு ஆட்டம் ஒன்றில் பரோடா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்தியது. இதில் 218 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 2-வது இன்னிங்சில் 35.1 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பர்கவ் பாத் 6 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து ஹீரோவாக ஜொலித்தார்.