ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மராட்டிய அணி 350 ரன் குவிப்பு
|ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மராட்டிய அணி 350 ரன்கள் குவித்தது.
மராட்டியம் ரன்வேட்டை
88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'பி' பிரிவில் புனேயில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-மராட்டியம் அணிகள் சந்தித்தன. 'டாஸ்' ஜெயித்த தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 118 ரன்கள் (126 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி களத்தில் இருக்கிறார். கேதர் ஜாதவ் (56 ரன்), அஜிம் காஸி (87 ரன்) அரைசதம் அடித்தனர். ராகுல் திரிபாதி 7 ரன்னில் கேட்ச் ஆனார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
பிரித்வி ஷா 240 ரன்
கவுகாத்தியில் நடக்கும் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முன்னாள் சாம்பியன் மும்பை அணி தொடக்க நாளில் 90 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 240 ரன்கள் (283 பந்து, 33 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்து களத்தில் இருக்கிறார். முதல்தர கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் அஜிங்யா ரஹானே 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஐதராபாத்தின் ஜிம்கானா மைதானத்தில் தொடங்கியுள்ள சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 30.5 ஓவர்களில் வெறும் 79 ரன்னில் சுருண்டது. ஜெய்தேவ் உனட்கட், தர்மேந்திரசின் ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.
தெண்டுல்கர் மகன் 4 ரன்
போர்வோரிம் நகரில் நடக்கும் புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் (சி பிரிவு) முதலில் பேட் செய்த கோவா அணி 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் தர்ஷன் மிசல் 50 ரன் எடுத்தார். தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 4 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய புதுச்சேரி அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் பெண் நடுவர்கள்
ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பெண் நடுவர்கள் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நேற்று தொடங்கிய ஜார்கண்ட்- சத்தீஷ்கார் இடையிலான ஆட்டத்தில் இரண்டு நடுவர்களில் ஒருவராக ஜி. காயத்ரி செயல்படுகிறார். இதே போல் சென்னையைச் சேர்ந்த 36 வயதான என். ஜனனி ரெயில்வே-திரிபுரா இடையிலான ஆட்டத்திலும், 32 வயதான ரிண்டா ரதி கோவா- புதுச்சேரி இடையிலான ஆட்டத்திலும் நடுவர்களாக உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பல்வேறு பெண்கள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டு இருக்கிறார்கள். ஆண்கள் முதல்தர கிரிக்கெட்டிலும் பெண் நடுவர்களை பயன்படுத்த கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் ரஞ்சியில் கால்பதித்து இருக்கிறார்கள்.