ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: வெற்றி பெறப்போவது யார்? பரபரப்பான சூழலில் நாளை கடைசி நாள் ஆட்டம்
|ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை,
89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா, மும்பை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களில் சுருண்டது. பின்னர் 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை 418 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 528 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய விதர்பா 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் அடித்துள்ளது. அக்ஷய் வாட்கர் 56 ரன்களுடனும், ஹர்ஷ் துபே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மும்பை தரப்பில் முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளும், ஷாம்ஸ் முலானி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த போட்டியில் மும்பை வெற்றி பெற இன்னும் 5 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். அதே சமயம் விதர்பா வெற்றி பெற 290 ரன்கள் அடிக்க வேண்டும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய பரபரபான சூழலில் நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.