ரஞ்சிக் கோப்பை : மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் மத்தியப்பிரதேச அணி நிதான ஆட்டம்..!!
|2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மத்திய பிரதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூரு,
ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் மத்தியப்பிரதேச அணியும், மும்பை அணியும் மோதி வருகின்றன. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை அணி முதலில் விளையாடியது.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ் கான் 40 ரன்னுடனும், ஷம்ஸ் முலானி 12 ரன்னுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
மும்பை அணி 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. மும்பையில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 124 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 78 ரன்களும், கேப்டன் பிருத்வி ஷா 47 ரன்களும் எடுத்தனர். மத்திய பிரதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கவுரவ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் மத்திய பிரதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக யாஷ் துபே மற்றும் ஹிமான்ஷு களமிறங்கினர். 31 ரன்கள் எடுத்த நிலையில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஹிமான்ஷு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷுபம் சர்மா களமிறங்கினார். யாஷ் துபே - ஷுபம் சர்மா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மத்திய பிரதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. யாஷ் துபே 44 ரன்களிலும் ஷுபம் சர்மா 41 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.